Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா…

India defeated Australia to finish off 2nd round
India defeated Australia to finish off 2nd round
Author
First Published Jul 21, 2017, 10:20 AM IST


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி டெர்பியில் நேற்று நடைபெற்றது.

மழைக் காரணமாக தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டம் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆட்டம் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, பூனம் ரெளத்துடன் இணைந்தார் கேப்டன் மிதாலி ராஜ். இந்த இணையும் நிலைக்கவில்லை.

பூனம் ரெளத் 14 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மிதாலியுடன் இணைந்தார் ஹர்மன்பிரீத் கெளர். இந்த இணை சிறப்பாக ஆட, இந்தியா மெதுவாக சரிவிலிருந்து மீண்டது.

இந்தியா 25 ஓவர்களில் 101 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மிதாலியின் விக்கெட்டை இழந்தது. அவர் 61 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து தீப்தி சர்மா களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய ஹர்மன்பிரீத் கெளர், கிர்ஸ்டன் பீம்ஸ் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசி அரை சதம் கண்டார். இதன்பிறகு தீப்தி சர்மா ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் ஹர்மன்பிரீத் கெளர் வெளுத்து வாங்கினார்.

தொடர்ச்சியாக பவுண்டரிகளை விளாசித் தள்ளிய ஹர்மன்பிரீத் கெளர், 90 பந்துகளில் சதமடித்தார். இதன்பிறகு ஆடிய ஹர்மன்பிரீத் கெளர், கார்ட்னர் வீசிய 37-வது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இந்தியா 38.4 ஓவர்களில் 238 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தீப்தி சர்மா ஆட்டமிழந்தார். அவர் 25 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து களம்புகுந்த வேதா கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக ஆட, ஹர்மன்பிரீத் மேலும் இரு சிக்ஸர்களை விளாசினார். கடைசி ஓவரில் வேதா கிருஷ்ணமூர்த்தி இரு பவுண்டரிகளை விரட்ட, 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் ஓட்டங்கள் குவித்தது இந்தியா.

ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 171 ஓட்டங்கள், வேதா கிருஷ்ணமூர்த்தி 10 பந்துகளில் 16 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்கட், கார்ட்னர், பீம்ஸ், விலானி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஷிகா பாண்டே பந்துவீச்சில் போல்டாக, அவரைத் தொடர்ந்து களம்புகுந்த கேப்டன் மெக் லேனிங் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஜூலான் கோஸ்வாமி பந்து வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

இதன்பிறகு நிக்கோல் போல்டான் 14 ஓட்டங்களில் வெளியேற, 7.2 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. பின்னர் வந்தவர்களில் எல்லிஸ் விலானி 75 ஓட்டங்கள், எல்லிஸ் பெர்ரி 38 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

மற்ற முன்னணி வீராங்கனைகள் விரைவாக வெளியேற, 169 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் பிளாக்வெல் - கிர்ஸ்டன் பீம்ஸ் இணை இந்தியாவை மிரட்டியது.

சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசித் தள்ளிய பிளாக்வெல் 56 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் 40.1 ஓவர்களில் 245 ஓட்டங்களுக்கு முடிவுக்கு வந்தது. பிளாக்வெல் - பீம்ஸ் (11) இணை கடைசி விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்தியத் தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து லார்ட்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios