Asianet News TamilAsianet News Tamil

இந்தியா-பெல்ஜியம் அணிகளுக்கு நாளை இறுதிச்சுற்று…

india belgium-teams-in-tomorrows-final-round
Author
First Published Dec 17, 2016, 11:42 AM IST


ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளன.

இதில் இந்திய அணியைப் பொருத்த வரையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. மறுமுனையில், பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக, 2-ஆவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. பரபரப்பான ஆட்டத்தில் 14-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டாம் கிரெய்க் கோல் கணக்கை தொடங்கினார்.
இதையடுத்து 42-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங்கும், 48-ஆவது நிமிடத்தில் மன்தீப் சிங்கும் தலா ஒரு கோல் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தனர். எனினும், 57-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் லாச்லன் ஷார்ப் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது.

ஆட்டத்தின் இறுதிநேரம் வரையில் இதே நிலை நீடித்ததால், ஷூட் அவுட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் ஹர்ஜீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சுமித், மன்பிரீத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாஹியா ஆஸ்திரேலியாவுக்கு 2 கோல் வாய்ப்புகளை மட்டுமே விட்டுக்கொடுத்ததால், இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் வென்றது.
முன்னதாக, முதலாவது அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஜெர்மனியும், பெல்ஜியமும் மோதின.

இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம் அணி.

இதர ஆட்டங்களில், ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் கொரியாவையும், எகிப்து அதே கோல் கணக்கில் கனடாவையும் வீழ்த்தின.

Follow Us:
Download App:
  • android
  • ios