india beat pakistan in semi final and will face australia in final
ஜூனியர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி அசத்தி வருகிறது.
உலகக்கோப்பையின் முதல் சுற்றிலிருந்து எந்த போட்டியிலும் தோல்வியுறாமல் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்திலும் பப்புவா நியூ குய்னா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வீழ்த்தியது.
காலிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.
இதையடுத்து அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி இன்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ப்ரித்வி ஷா 41 ரன்களும் மஞ்ஜோத் கல்ரா 47 ரன்களும் எடுத்தனர். மூன்றாவது களமிறங்கிய ஷப்மன் கில், வழக்கம்போல சிறப்பாக ஆடினார். பாகிஸ்தானின் பந்துகளை பறக்கடித்த கில், சதமடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல், கில் 102 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 272 ரன்கள் எடுத்தது. 273 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்ப, 29.3 ஓவருக்கே வெறும் 69 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் பிப்ரவரி 3ம் தேதி இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டிராவிட் பயிற்சியளிக்கும் இந்திய அணி தான் ஜூனியர் உலகக்கோப்பையை வெல்லும் என ஏற்கனவே பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கேற்றாற்போலவே உலகக்கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது.
ஜூனியர் உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி.
