டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அபாரமாக ஆடிய இந்தியா 4-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியைத் தோற்கடித்தது.
இந்தியா - நியூஸிலாந்து இடையிலான ஆசிய - ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புணேவில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது.
இதில் முதல் நாளில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், யூகி பாம்ப்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இரண்டாவது நாளில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி, நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக்-மைக்கேல் வீனஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இந்த நிலையில் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் 7-5, 6-1, 6-0 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் ஃபின் டியர்னியை தோற்கடிக்க, இந்தியாவின் வெற்றி உறுதியானது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் ஜோஸ் ஸ்டாட்ஹாமை தோற்கடித்தார். இதன்மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
இந்திய அணி வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள குரூப் 2 சுற்றில் உஸ்பெகிஸ்தானை சந்திக்கவுள்ளது.
முன்னதாக உஸ்பெகிஸ்தான் தனது முதல் சுற்றில் தென் கொரியாவை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
