முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. 

அதனைத் தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதுகிறது. 

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. எனினும், அனுபவம் வாய்ந்த அக்ஸர் படேலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதல் ஆட்டத்தில் இடம் கிடைக்காத லோகேஷ் ராகுல் இந்த ஆட்டத்தில் அணிக்கு திரும்பும் பட்சத்தில், மிடில் ஆர்டரில் களம் காணலாம்.

முதல் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் இந்த ஆட்டத்திலும் தனக்கான வாய்ப்பை உறுதி செய்வார். ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார் இடத்தில் அணிக்குள் இணைந்திருக்கும் ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட் ஜோடி இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டியுள்ளது.

வங்கதேசத்தைப் பொருத்த வரையில், காயம் காரணமாக ஷாகிப் அல் ஹசன் ஓய்விலிருக்கும் நிலையில், மஹ்முதுல்லா அணிக்கு தலைமை தாங்குகிறார். சமீபத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களை இலங்கை அணியிடம் இழந்த வங்கதேசம், அதிலிருந்து மீளும் முயற்சியாக உத்வேகத்துடன் இந்தத் தொடரை எதிர்கொள்ளும்.

இந்திய அணியின் விவரம்: 

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்ஸர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், ரிஷப் பந்த்.

வங்கதேச அணியின் விவரம்: 

மஹ்முதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், செளம்யா சர்கார், இம்ருல் கயஸ், முஷ்ஃபிகர் ரஹிம், சபிர் ரஹ்மான், முஸ்டாஃபிஸுர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், டஸ்கின் அகமது, அபு ஹைதர், அபு ஜெயத், அரிஃபுர் ஹக், நஸ்முல் இஸ்லாம், நுருல் ஹசன், மெஹதி ஹசன், லிட்டன் தாஸ்.