இந்தியா ஏ, இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகள் கலந்துகொண்டு ஆடும் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ, மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகளும் மோதிவருகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில், 2 போட்டிகளில் ஆடி இந்தியா ஏ அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் ஆடி இரண்டிலுமே இந்தியா பி அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணி ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா ஏ அணி வெற்றி பெறவே இல்லை. 

இந்நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடந்துவருகின்றன. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையே ஒரு போட்டியும் இந்தியா பி மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே மற்றொரு போட்டியும் நடந்துவருகிறது. 

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ இடையேயான போட்டி:

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ அணி பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து இந்தியா ஏ அணி பேட்டிங் ஆடிவருகிறது. ஏ அணியின் தொடக்க வீரர்கள் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும் அபிமன்யூ ஈஸ்வரன் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். இவர்களை அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு, குருணல் பாண்டியா மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து ஏ அணி 76 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சஞ்சு சாம்சனும் தீபக் சாஹரும் இணைந்து ஆடி வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் பொறுப்புடன் நிதானமாக ஆடிவருகிறார். 30 ரன்களை கடந்து சாம்சன் ஆடிவருகிறார். அவருக்கு தீபக் சாஹர் ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவருகிறார். 32 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. 

இந்தியா பி - ஆஸ்திரேலியா ஏ இடையேயான போட்டி:

இந்தியா ஏ அணி திணறிவரும் அதேநேரத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி டாஸ் வென்று, இந்தியா பி அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய பி அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் இஷான் கிஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 58 ரன்களை சேர்த்தது. அகர்வால் 36 ரன்களும் இஷான் 31 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஷுப்மன் கில்(4), கேதர் ஜாதவ்(5) ரன்களுக்கு வெளியேறினர். 

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் பி அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி அதிரடியாக ஆடிவருகிறார். 5வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடாவும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். எனினும் அவர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மனீஷ் பாண்டேவுடன் சக்சேனா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

சிறப்பாக ஆடிவரும் மனீஷ் பாண்டே, 82 ரன்கள் குவித்து ஆடிவருகிறார். சதத்தை நோக்கி மனீஷ் சென்றுகொண்டிருக்கிறார். பி அணி 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் அடித்து ஆடிவருகிறது.