இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் களமிறங்குகிறது.

அதேசமயம் முதல் ஆட்டத்தில் தவறவிட்டதை இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தீவிரமாக களமிறங்குகிறது இலங்கை அணி.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்தப் போட்டியில் இரு மாற்றங்கள். வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்தப் போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். அதனால் கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய தமிழகத்தின் அபிநவ் முகுந்த் இந்தப் போட்டியில் விளையாடமாட்டார்.

கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெறலாம். அதனால் கடந்த போட்டியில் அறிமுக வீரராக களம்புகுந்த ஹார்திக் பாண்டியாவுக்கு இந்தப் போட்டியில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கே.எல்.ராகுல், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பின்வரிசையில் அஸ்வின், விருத்திமான் சாஹா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். எனவே இந்தப் போட்டியிலும் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்கும்.

வேகப்பந்து வீச்சில் முகமது சமி, உமேஷ் யாதவ் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் கூட்டணி கலக்கக் காத்திருக்கிறது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் தினேஷ் சன்டிமல் மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தினேஷ் சன்டிமல், களத்தில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 'இன்ஹேலர்' பயன்படுத்திக் கொள்ள ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அணியில் உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல், மேத்யூஸ், டிக்வெல்லா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் நுவான் பிரதீப் - தில்ருவான் பெரேரா கூட்டணி பலம் சேர்க்கிறது. இலங்கை அணியில் ரங்கனா ஹெராத்துடன் டி சில்வா, மலின்டா புஷ்பகுமாரா ஆகியோரும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

இந்தியா அணிஹ்யின் விவரம்:

கே.எல்.ராகுல், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, அஸ்வின், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சமி.

இலங்கை அணியின் விவரம்:

உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல் (கேப்டன்), ஏஞ்ஜலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கனா ஹெராத், மலின்டா புஷ்பகுமாரா, நுவான் பிரதீப்.