India - Sri Lanka first test series starts today

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்துத் தொடர்களையும் 9-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி வொயிட்வாஷ் செய்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. வரும் ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு முக்கியமான ஒன்றாகும்.

எனவே, இலங்கைக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு, அந்த நம்பிக்கையுடன் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொருத்த வரையில், தொடக்க வீரர்களாக ஷிகர் தவன், கே.எல்.ராகுல் களம், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் அணியில் உள்ளனர்.

மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே வலு சேர்க்க, ஆல்ரவுண்டர் வரிசையில் அஸ்வின் இணைந்துள்ளார்.

பந்துவீச்சைப் பொருத்த வரையில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி வேகப்பந்து வீச்சிலும், அஸ்வின், ஜடேஜா சுழற்பந்துவீச்சிலும் அதிரடி காட்ட உள்ளனர்.

மறுபுறம், சொந்த மண்ணில் இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று நம்பிக்கையுடன் உள்ளது.

தற்போது இந்தியாவுடன் மோத இருக்கும் இலங்கை அணியில் ஏஞ்ஜெலோ மேத்யூஸ், ரங்கனா ஹெராத், கேப்டன் தினேஷ் சண்டிமல் உள்பட வீரர்கள் உள்ளனர்.

அந்த அணியின் பேட்டிங்கில் சமரவிக்ரமா, திமுத் கருணாரத்னே, மேத்யூஸ் உள்ளனர். பந்துவீச ரங்கனா ஹெராத், லக்ஷன் சன்டகன், தில்ருவன் பெரேரா ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணியின் விவரம்

விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, இஷாந்த் சர்மா.

இலங்கை அணியின் விவரம்:

தினேஷ் சண்டிமல் (கேப்டன்), லாஹிரு திரிமானி (துணை கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லாஹிரு காமேஜ், தனஞ்ஜெய டி சில்வா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், லக்ஷன் சன்டகன், விஷ்வா ஃபெர்னான்டோ, டாசன் சனகா, ரோஷன் சில்வா.