India - South Africa crash to start Test cricket today Do not miss ...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுண் நகரில் இன்று தொடங்குகிறது.
மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து தனது 2018-ஆம் ஆண்டு சீசனை தொடங்கும் இந்தியா, மொத்தமாக 12 டெஸ்ட் தொடர்களை அந்நிய மண்ணில் விளையாட உள்ளது.
இதுவரை 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து வென்றுள்ளது இந்தியா. அதில் இந்திய மண்ணில் 6 வெற்றி, இலங்கையில் 2 வெற்றி, மேற்கிந்தியத் தீவுகளில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
கடைசியாக இந்தியா 2014-15-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது.
இந்தத் தொடரில் இந்தியா, வேகப்பந்துவீச்சாளர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. அதேபோல், தென் ஆப்பிரிக்க அணியும் பலம்வாய்ந்த தனது பந்துவீச்சு படையைக் கொண்டு இந்தியாவின் திறம் வாய்ந்த பேட்டிங் வரிசையை திண்டாடச் செய்ய காத்திருக்கிறது.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க மண்ணுக்கு உகந்த வகையில் புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது சமி களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வைரஸ் காய்ச்சலால் ஜடேஜா அவதிப்பட்டு வருவதால், சுழற்பந்துவீச்சு பொறுப்பு அஸ்வினிடம் ஒப்படைக்கப்படலாம்.
பேட்டிங்கைப் பொருத்த வரையில் காயத்திலிருந்து மீண்டுள்ள தவன், முரளி விஜயுடன் ஆட்டத்தை தொடங்குவார். அடுத்து லோகேஷ் ராகுல், புஜாரா, கோலி உள்ளிட்டோர் களத்துக்கு வரலாம். அஜிங்க்ய ரஹானே ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பது கேள்விக் குறியுடன் இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணியை பொருத்த வரையில் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும், ககிசோ ரபாடா, பிலாண்டர், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மஹாராஜ் களம் காணலாம்.
பேட்டிங் வரிசையில் குவிண்டன் டி காக் மீண்டுவிட்ட நிலையில், டி வில்லியர்ஸ் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய எதிர்பார்ப்பில் அந்த அணி உள்ளது. கேப்டன் ஃபா டூபிளெஸ்ஸிஸ் முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பியுள்ளது பெரும் பலம்.
இந்திய அணியின் விவரம்
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா, ஹார்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, பார்திவ் படேல்.
தென் ஆப்பிரிக்க அணியின் விவரம்
ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், ஹசிம் ஆம்லா, டெம்பா பவுமா, தியூனிஸ் டி புருய்ன், குவிண்டன் டி காக், கேசவ் மஹாராஜ், மோர்னே மோர்கெல், டேல் ஸ்டெய்ன், கிறிஸ் மோரிஸ், வெர்னான் பிலாண்டர், ககிசோ ரபாடா, அன்டிலே பெலுக்வாயோ.
