In the next match Pandya will soon be defeated - Adam Sampa believes ...
இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவை அடுத்த ஆட்டத்தில் விரைவில் வீழ்த்துவேன் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது இணைந்த ஹார்திக் பாண்டியா - தோனி இணை இந்திய அணியை வெற்றியை நோக்கி நகரச் செய்தது.
அப்போது, சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையான ஆடம் ஸம்பாவின் ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார் பாண்டியா.
இந்த நிலையில், 2-வது ஒருநாள் ஆட்டத்திற்கு கொல்கத்தாவில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆடம் ஸம்பா, “நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நான் நன்றாகவே பந்து வீசுவேன். ஆனால், எனது பந்து வீச்சுத் திட்டங்களை ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக சரியான முறையில் பிரயோகிக்கத் தவறிவிட்டேன்.
நான் வீசிய மூன்று ஃபுல்டாஸ் பந்துகளையுமே அவர் சிக்ஸர் அடித்தார். ஹார்திக் பாண்டியா போன்ற ஒரு நல்ல வீரருக்கு எதிராக தவறிழைக்கும் பட்சத்தில், அவரை ஆட்டமிழக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் விலகிச் சென்றுவிடும்.
இந்தியா போன்ற துணை கண்டங்களில் விளையாடும்போது, பந்துவீச்சில் நீளம் என்பது முக்கியமான ஒன்று.
ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது பந்துவீச்சின் நீளத்தில் சிறிய தவறு செய்தாலும், மைதானத்தின் அளவு காரணமாக அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இந்தியாவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இந்த சூழ்நிலையில் இருந்து சில விஷயங்களை கற்றுள்ளேன். அடுத்த ஆட்டங்களில் பாண்டியாவை விரைவாகவே வீழ்த்துவேன் என்று நம்புகிறேன்” என்று ஆடம் ஸம்பா தெரிவித்தார்.
