இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துவிட்டதால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுதந்திரமாக ஆடுகிறேன் என ஐதராபாத் அணியின் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் உருக்கமாகத் தெரிவித்தார்.

ஐதராபாதில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

இதில் அபாரமாக ஆடிய யுவராஜ் சிங் 27 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தினார். பின்னர், வெற்றி குறித்துப் யுவராஜ் சிங் பேசினார்.

அவர், “இந்த ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் ரசித்து விளையாடினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது பேட்டிங் ஏற்ற, இறக்கமாக அமைந்தது. ஆனால், தற்போதைய நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கிறேன். இதே ஃபார்மை நான் தொடர்வது மிக அவசியமாகும்.

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துவிட்டதால் இப்போது நெருக்கடியின்றி சுதந்திரமாக விளையாட முடிகிறது. மேலும், எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. சூழலுக்கு ஏற்றவாறு விளையாடுகிறேன்' என்றார்.