Gautam Gambhir the Delhi cricket team head coach in charge
தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணரும் வகையில் டெல்லி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கே.பி.பாஸ்கர் நடந்துகொள்கிறார் என்று டெல்லி கிரிக்கெட் அணியின் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஸ்கருடன் கம்பீர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஊடகத்தில் சில தகவல்கள் வெளியானதையடுத்து கம்பீர் நேற்று அளித்த பேட்டி:
“பாதுகாப்பில்லாத ஒரு சூழலில் ஒரு இளம் வீரரை பாதுகாப்பாக உணர வைப்பது தவறு என்றால், நான் அந்த தவறை செய்வேன். ஆனால், உன்முக்த் சந்த், நிதிஷ் ராணா போன்ற இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் பயிற்சியாளர் பாஸ்கர் விளையாட நான் அனுமதிக்க முடியாது.
இமாசல பிரதேசத்தில் டி20 போட்டியை தோற்ற பிறகு அவர் பேசியதையெல்லாம் என்னால் வெளியில் கூற இயலாது. இதுதான் இளம் வீரர்களை அவர் கையாளும் முறையா?
டெல்லி கிரிக்கெட் வீரர்கள், தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்கும் நிலை உள்ளது. இளைஞனாக இருக்கும்போது நானே அந்தப் பிரச்னையை எதிர் கொண்டுள்ளேன். எனவே தான் 23 முதல் 24 வயதில் அணியில் இருக்கும் இளம் வீரர்களை பாதுகாப்பாக உணர வைக்க கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன்.
சில மோசமான ஆட்டத்துக்குப் பிறகு உன்முக்த் சந்த், நிதிஷ் ராணா போன்ற நல்ல வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
உன்முக்த் இதுகுறித்து கேட்டதற்கு அவர் ஆட்டம் சரியில்லை என்று பாஸ்கர் கூறியுள்ளார். உண்மையில் அவரது ஆட்டம் சரியில்லை என்றால் தேர்வுக் குழு கூட்டத்தின்போது பாஸ்கர் அதைக் கூறலாம்.
பிளேயிங் லெவனில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம். ஆனால், அவர்களை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என்றே கூறுகிறேன். அடுத்த முறை அணிக்கு வரும்போது மிகவும் பாதுகாப்பில்லாத நிலையை அவர்கள் உணர்வார்கள்.
டெல்லியில் நல்லதொரு கிரிக்கெட் அமைப்பு இல்லை. இப்பிரச்னைகள் குறித்து தேர்வாளர்களிடம் பேசலாம் என்றால், அவர்கள் ஒரு ஆட்டத்தை கூட பார்ப்பது இல்லை.
தேர்வாளர்கள் டெல்லி கிரிக்கெட்டிற்கு உண்மையாக இருப்பவர்கள் என்றால், வீரர்களை விலக்கி வைப்பதற்கு மட்டுமல்லாமல், அவர்களின் விளையாட்டை பார்ப்பதற்கும் வர வேண்டும்” என்று கம்பீர் பேட்டி அளித்தார்.
