இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவை ஐசிசி எச்சரிக்கை செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் மற்றும் ராயுடுவின் அபார சதத்தால் இந்திய அணி 377ரன்களை குவித்தது. 

378 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகள் ரன் அவுட். இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துவரும் அந்த அணியின் இரண்டு வீரர்களில் ஒருவரான ஹோப், ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இந்திய அணியை தெறிக்கவிடும்  மற்றொரு வீரரான ஹெட்மயரை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கலீல் அகமது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது, நேற்றைய போட்டியில் அபாரமாக வீசினார். ஹெட்மயர், அனுபவ வீரரான சாமுவேல்ஸ், ரோமன் பவல் ஆகிய மூவரையும் வீழ்த்தினார். 5 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

14வது ஓவரில் சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்திய கலீல் அகமது, சாமுவேல்ஸை நோக்கி மிகவும் ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் ஏதோ கத்தி வழியனுப்பிவைத்தார். ஐசிசி விதிப்படி, எதிரணி வீரர்களை திட்டுவது, ஆக்ரோஷமாக அணுகுவது, வம்பிழுக்கும் வகையில் செய்கைகள் செய்வது ஆகியவை குற்றமாகும். அந்தவகையில் கலீல் அகமதுவின் செயல் குற்றம் என்பதால், ஐசிசி அவரை எச்சரித்துள்ளதோடு, ஒரு டிமெரிட் புள்ளியையும் வழங்கியுள்ளது. இளம் வீரர் என்பதால் எச்சரிக்கையோடு நிறுத்திக்கொண்டுள்ளது ஐசிசி. 

இனி இதுமாதிரி நடந்துகொண்டால், அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.