அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர் தோனி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு அதிசயத்தை நிகழ்த்திவிடுகிறார். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லர் காலை தூக்கிவிட்டு ஊன்றுவதற்குள்ளாக ஸ்டம்பிங் செய்து மிரட்டினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தோனியின் விக்கெட் கீப்பிங் திறமையை மற்றுமொரு முறை அனைவரும் மெச்சினர். 

மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநாள் போட்டிகளில் காயம் காரணமாக ஆடாத தோனி, நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். பேட்டிங்கில் 1 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றிய நிலையில், தனது இருப்பின் அவசியம் என்ன என்பதை விக்கெட் கீப்பிங்கில் மீண்டும் காட்டினார். 

மெயின் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட போதிலும் பின்வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீஷம், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசி இந்திய அணியை அச்சுறுத்தினார். அவரை வீழ்த்த பவுலர்கள் திணறிய நிலையில், தனது சமயோசித புத்தியால் அவரை அபாரமான ரன் அவுட் மூலம் வெளியேற்றினார் தோனி. தோனியின் விக்கெட் கீப்பிங் திறமையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ள டுவீட்டில், ஸ்டம்புக்கு பின்னால் தோனி நின்றால் கிரீஸை விட்டு வெளியே போகாதீர்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.