களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் சூப்பர் 4 சுற்றிற்கு முன்னேறி, அந்த சுற்றில் ஆடிவருகின்றன. இதில் கடந்த 21ம் தேதி ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மோதிய போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. 

258 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு பாகிஸ்தானை போராடவைத்தது. ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கின் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும் அனுபவ வீரர் ஷோயப் மாலிக்கின் நிதானமான அனுபவமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் ஐசிசி விதிகளை மீறும் வகையில் சீண்டிக்கொண்டனர். ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது 33வது ஓவரில் ஆஃப்கான் பேட்ஸ்மேன் ஷாகிடியை அச்சுறுத்தும் வகையில் பவுலர் ஹசன் அலி பந்தை வீசினார். அதன்பிறகு 37வது ஓவரில் ஆஃப்கான் கேப்டன் அஸ்கர் ரன் ஓடும்போது ஹசன் அலியை தோளில் இடித்துவிட்டு ஓடினார். எதிரணி வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் இவை இரண்டுமே ஐசிசி விதிமீறல் ஆகும். 

அதேபோல, பாகிஸ்தான் இன்னிங்ஸின் போது 47வது ஓவரில் அந்த அணி வீரர் ஆசிப் அலியை அவுட்டாக்கிய ரஷீத் கான், வெளியேபோகும்படி சைகை காட்டி வழியனுப்பிவைத்தார். இதுவும் ஐசிசி விதிமீறல் ஆகும். எனவே ஹசன் அலி, அஸ்கர் மற்றும் ரஷீத் கான் ஆகிய மூவருக்கும் போட்டி ஊதியத்தில் 15%ஐ அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.