2018ம் ஆண்டில் ஜொலித்த வீரர்களை கொண்டு சிறந்த ஒருநாள் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. 2018ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய மூன்று விருதுகளையும் ஒருசேர வென்று சாதனை படைத்த கோலிதான், 2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கும் கேப்டன்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கும் கோலி தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஒருநாள் அணிக்கும் அவரையே கேப்டனாக தேர்வு செய்துள்ளது ஐசிசி. 

ஐசிசி தேர்வு செய்துள்ள ஒருநாள் அணியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள்தான் சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளன. இந்த 2 அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். 

அதற்கேற்ப ஐசிசி தேர்வு செய்துள்ள 2018ம் ஆண்டின் சிறந்த அணியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தான் பெருமளவில் இடம்பிடித்துள்ளனர். 

இந்த அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் வரிசைக்கு பெயர்போன கோலி அந்த இடத்திற்கும் 4ம் வரிசை வீரராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த ஃபார்மில் இருந்துவரும் நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் 5ம் வரிசை வீரராகவும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 6ம் வரிசை வீரராகவும் உள்ளனர். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் ஆகிய இருவரும் ஆல்ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக இந்தியாவின் பும்ரா மற்றும் வங்கதேசத்தின் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய இருவரும் உள்ளனர். ஸ்பின் பவுலரான குல்தீப் யாதவிற்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ஐசிசி தேர்வு செய்த 2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலி(கேப்டன்), ஜோ ரூட், ரோஸ் டெய்லர், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ரஷீத் கான், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், பும்ரா.