I will see all the matches to encourage India - Mallya ...

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவை உற்சாகப்படுத்த எல்லாப் போட்டிகளையும் காண்பேன் என்று வாங்கிய கடனை திருப்பித் தராமல் இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆன விஜய் மல்லையா டிவிட்டியுள்ளார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தைத் தொடங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 200 கோடியை கடனாகப் பெற்ற அதனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாமல் சுவாகா செய்துவிட்டு இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆனவர் விஜய் மல்லையா.

இது தொடர்பாக வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து இலண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றார். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது மட்டுமன்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல்வாதிகள் ஒடுக்கப்படுவார்கள் என்று கர்சித்த மோடிக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு கம்பி நீட்டிய பெருமை மல்லையாவையே சேரும்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள எட்பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியைக் காண மல்லையா வந்திருந்தார். பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து அவர் ஆட்டத்தைப் பார்த்தது அதிக கவனத்தை ஈர்த்தது. அவரும் சுனில் கவாஸ்கரும் இணைந்து உரையாடிய புகைப்படங்களும் வெளியாகின.

இதையடுத்து விஜய் மல்லையா தனது டிவிட்டரில், “இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண நான் வந்ததற்கு ஊடக வெளிச்சம் மிக அதிகமாகக் கிடைத்துள்ளது.

இந்தியாவை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக எல்லாப் போட்டிகளையும் காணவுள்ளேன். உலகின் மிகச்சிறந்த வீரர், மிகச்சிறந்த கேப்டன், பண்பான மனிதர் கோலி என்று கோலியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் மல்லையா.