I want to win matches the Dinesh Karthik way

ஐபிஎல் தொடரின் இன்றைய 33-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான கொல்கத்தா அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. கொல்கத்தா அணி இரண்டு ஓவர் மீதமிருக்கையிலே அதாவது 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி முதல் இடத்தைப் பறிகொடுத்து இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஹைதராபாத் அணி 8 ஆட்டங்களில் விளையாடி ஆறில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போல் கொல்கத்தா அணி நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பேட்டிங், பௌலிங் ஆகியவற்றில் சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நேற்றையப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியில் வாட்சன், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தால் ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் ஐந்து ஓவருக்கு 48 ரன்கள் சேர்ந்தது. ஆனால், இந்த ஜோடியை ஆறாவது ஓவரில் சுனில் நரேன் பிரித்தார். அவர் வீசிய பந்தில் டு பிளிசிஸ் போல்டாகி வெளியேறினார். அவர் 15 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வாட்சன் உடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். வந்த வேகத்தில் ரெய்னா பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விரட்டத் தொடங்கினார். இதனால் சென்னை அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் குவித்திருந்தது. இதனால் சென்னை அணி எளிதாக 200 ரன்களை எட்டி விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சுனில் நரேன் வீசிய 11ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் வாட்சன் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

வாட்சன் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ரெய்னா 31 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் சென்னை அணியின் ரன் ரேட் சரிய ஆரம்பித்தது. அதிரடி காட்ட முயன்ற அம்பதி ராயுடு 21 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஆனால், அடுத்து வந்த தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தச் சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. தோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். ஜடேஜா 12 பந்தில் 12 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி சார்பில் பியூஸ் சாவ்லா, சுனில் நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் ஆகியோர் இறங்க முதல் ஓவரில் லைன் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் தனது கணக்கை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து உத்தப்பா களமிறங்கினார். அடுத்த ஓவரை ஆசிப் வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் சிக்ஸர் அடித்தார். ஆனால், அடுத்த இரண்டு பந்துகளிலும் நரேன் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட அது அணியின் வெற்றி வாய்ப்பைத் தகர்த்தெறிய காரணமாக அமைந்தது.

ஆசிப் வீசிய ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் உத்தப்பா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷுப்மான் கில் களமிறங்கினார். ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது.

ஜடேஜா வீசிய ஏழாவது ஓவரின் முதல் மூன்று பந்தில் நரேன் 8 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தை நரேன் தூக்கியடிக்க, பிராவோ கேட்ச் பிடித்தார். நரேன் 20 பந்தில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 12ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ரிங்கு சிங் 16 ரன்களில் போல்டானார்.

இதுவரை வெற்றி வாய்ப்பு இருவருக்கும் சமநிலையில் இருந்த நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 15ஆவது ஓவரை ஆசிப் வீச அந்த ஓவரில் கில் இரண்டு சிக்ஸர்களும், தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இதனால் அந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். கொல்கத்தா அணி 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அப்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 23 ரன்கள் மட்டுமே தேவை. கில், தினேஷ் இருவரும் தொடர்ந்து அதிரடியில் ஈடுபட அந்த அணி 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. ஷிப்மான் கில் 57 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணியை வீழ்த்தி அரங்கில் பெருமளவில் கூடியிருந்த தனது ரசிகர்களுக்குக் கொல்கத்தா அணி வெற்றியைப் பரிசளித்தது. இரு விக்கெட்டுகளை வீழ்த்தி 32 ரன்களைச் சேர்த்த சுனில் நரேன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.