I have not lost the opportunity to become the worlds first player - Srikanth hopes ...

உலகின் முதல்நிலை வீரர் ஆவதற்கான வாய்ப்புகளை நான் முழுமையாக இழந்துவிடவில்லை என்று இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஓர் ஆட்டத்தில் 21 புள்ளிகள் பெறும் வகையில் 3 கேம்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், உலக பாட்மிண்டன் சம்மேளனமானது ஓர் ஆட்டத்தில் 11 புள்ளிகள் பெறும் வகையில் 5 கேம்களை கொண்டு வருவதற்கான பரிந்துரையை முன்மொழிந்துள்ளது.

பாங்காக்கில் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள உலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் இதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் நேற்று செய்தியாளர்களிடம், "ஸ்கோரிங் முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பாக ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் முன்பு கருத்து கேட்கப்பட்டது.

என்னைப் பொருத்த வரையில் 11 புள்ளிகள் முறையை நான் முயற்சித்தது இல்லை. 21 புள்ளிகள் முறையே எனக்கு சாதகமான ஒன்று. அதுவே தொடர விரும்புகிறேன்.

அதேபோல், அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டி முதலாக சர்வீஸ் விதிமுறையிலும் மாற்றம் வருகிறது. இந்த புதிய விதிமுறையால் பெரும்பாலான வீரர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால், 6 அடிக்கும் உயரமாக இருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.

உலகின் முதல்நிலை வீரர் ஆவதற்கான வாய்ப்புகளை நான் முழுமையாக இழந்துவிடவில்லை. அடுத்த 3-4 மாதங்களில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் என்னால் முதலிடத்துக்கு வர இயலும்.

இந்த சீசன் மிகக் கடினமாக ஒன்றாக இருக்கும். எனவே, உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதுடன் உரிய திட்டங்களையும் வகுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.