என் மீதான ஓராண்டுத் தடையை முழுமையாக ஏற்கிறேன் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தினார் டேவிட் வார்னர்.

மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றார். இது கேமராக்களில் பதிவாகியது. 

இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். 

அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டது. 

பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. நாடு திரும்பிய ஸ்மித், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அது அவருக்குப் பல்வேறு தரப்புகளில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. 

தடையை எதிர்த்து முறையீடு செய்ய மூவருக்கும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் உள்ளது.  கிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்தியது தொடர்பான புகாரில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று ஸ்டீவ் ஸ்மித்தும் ஃபான்கிராஃப்டும் நேற்று தெரிவித்தார்கள். 

அதனைத் தொடர்ந்து, "ஸ்மித், ஃபான்கிராஃப்ட் போல தானும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை" என்று டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், "என் மீதான ஓராண்டுத் தடையை முழுமையாக ஏற்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குத் தெரியப்படுத்துகிறேன். என்னுடைய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சிறந்த மனிதனாக, சிறந்த வீரராக, சிறந்த ரோல்மாடலாக இருப்பதற்கான அனைத்து நல்ல விஷயங்களையும் இனி நான் செய்வேன்" என்று தெரிவித்தார்.