
ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் 3-6, 1-6 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீரர் மிஸ்சா ஸ்வெரேவிடம் எளிதில் தோல்வி கண்டு வெளியேறினார்.
இந்த ஆட்டத்தில் கிர்ஜியோஸ் ஏனோ, தானோ வென்று ஆமை வேகத்தில் செயல்பட்டார். மைதான நடுவர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இரசிகர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக ஆடினார்.
இது குறித்து கிர்ஜியோஸ்சிடம் கேட்ட போது, ‘மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வாக இருந்ததால் எனது ஆட்டம் மோசமாக இருந்தது. நான் யாரையும் எனது ஆட்டத்தை பார்க்க வரும் படி அழைக்கவில்லை. எனது மோசமான ஆட்டத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று அதிரடியாக பதிலளித்தார். ஆனால் பின்னர் டுவிட்டர் பதிவில் அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.
