கோலியை தேர்வு செய்ததால் எனது பணியை பிடுங்கிக்கொண்டு என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்  என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளராக இருந்த திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார்.

கோலிக்கு பதிலாக தமிழக வீரர் பத்ரிநாத்தை தேர்வு செய்யாததற்காக அப்போதைய பிசிசிஐ செயலராக இருந்த ஸ்ரீனிவாசனுக்கு தன் மீது அதிருப்தி இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து தான் பணியை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளராக இருந்த திலிப் வெங்சர்கார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், “ஆஸ்திரேலியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு, வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து நாடுகளின் 'ஏ' அணிகள் பங்கேற்றன. 

அந்தப் போட்டிக்கு 23 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியை அனுப்ப தேர்வாளர்கள் முடிவு செய்தோம். அப்போது கோலி தலைமையிலான இந்திய அணி 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றிருந்ததால், கோலியையும் அந்த அணிக்கு தேர்வு செய்திருந்தேன். சக தேர்வாளர்களும் அதற்கு ஒப்புதல் அளித்தனர்.

அந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களம் கண்ட கோலி, 120 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி திறமையுடன் இருந்ததால், இலங்கை தொடரில் அவர் இந்தியாவுக்காக ஆட முடிவு செய்தேன்.

ஆனால், அப்போதைய கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ஆகியோருக்கு கோலியை தேர்வு செய்ததில் உடன்பாடு இல்லை. 'கோலியின் விளையாட்டை பார்த்ததில்லை. எனவே, ஏற்கெனவே இருக்கும் அணியுடனேயே தொடருவோம்' என்றனர். 

நான் கோலியின் திறமையான ஆட்டத்தை பார்த்துள்ளேன். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இலங்கை தொடரில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணியில் வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி என 5 பேர் தவிர்க்க முடியாத தேர்வாகியிருந்தனர். 6-வது இடத்துக்கான போட்டியில் கோலியும், பத்ரிநாத்தும் இருந்தனர்.

இதில் பத்ரிநாத், ஸ்ரீனிவாசனின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி வந்தார். நான் கோலியை பரிந்துரைத்தபோது ஸ்ரீனிவாசன் அதிருப்தி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கோலி வெளிப்படுத்திய ஆட்டத்தை கொண்டு நான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன்.

பத்ரிநாத் தமிழக அணிக்காக 800 ஓட்டங்கள் சேர்த்ததாக ஸ்ரீனிவாசன் கூறினார். 'அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கும்' என்று நான் கூறியபோது கோபம் கொண்ட ஸ்ரீனிவாசன், 'பத்ரிநாத்துக்கு இப்போது 29 வயது. அவருக்கான வாய்ப்புகள் வேறு எப்போது கிடைக்கும்?' என்றார்.

'நேரம் வரும்போது கிடைக்கும்' என்று நான் கூறினேன். பின்னர் கோலி இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்தச் சூழலில், ஸ்ரீனிவாசனின் ஆதரவு கிரிஷ் ஸ்ரீகாந்த், இந்திய தேர்வுக் குழு தலைவரானார். அத்துடன் நான் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். எனது தேர்வாளர் பணி முடிவுக்கு வந்தது” என்று அவர் தெரிவித்தார்.