I can play better with Partnership with this - Rohit Sharma ...

கோலியுடன் அமைந்த நல்ல பார்ட்னர்ஷிப்பால்தான் என்னால் சிறப்பாக ஆட முடிந்தது என்று இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியதன்மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில், நியூஸிலாந்து அணி வெற்றி பெறக்கூடிய நிலையில் இருந்தது. ஆனால் கடைசிக் கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார் கூட்டணி, நியூஸிலாந்தை சரிவுக்கு உள்ளாக்கியது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 147 ஓட்டங்கள் குவித்த ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியது:

“பூம்ராவும், புவனேஸ்வரும்தான் சர்வதேச அளவில் கடைசிக் கட்ட ஓவர்களை துல்லியமாக வீசக் கூடிய சிறந்த பந்துவீச்சாளர்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை எடுத்துக் கொண்டால், அவர்கள் இருவரும் பந்துவீசியவிதம் பாராட்டுக்குரியது.

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் தாக்குதல் ஆட்டத்தைக் ஆடக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் அவர்களை பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் பூம்ராவும், புவனேஸ்வரும் வீழ்த்தினார்கள்.

நியூஸிலாந்துடனான 3-வது ஆட்டத்தில் நாங்கள் பீல்டிங் செய்தபோது கடும் பனிப்பொழிவு இருந்தது. கான்பூர் ஆடுகளத்தில் கடைசி 4 ஓவர்களில் 35 ஓட்டங்கள் என்பது எளிதாக எடுக்கக் கூடியதுதான். ஆனால் பூம்ராவும், புவனேஸ்வரும் சிறப்பாக செயல்பட்டு எங்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை ஒப்பிட்டு பேசுவாக இருந்தால், அவையிரண்டுமே கடினமானவைதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பலமுறை எங்களுக்கு சவாலான சூழல் நிலவியது. ஆனால் அதை நாங்கள் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி கண்டோம்.

மும்பையில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நாங்கள் போதுமான அளவுக்கு ஓட்டங்கள் குவிக்கவில்லை. வான்கடே மைதானத்தில் 280 ஓட்டங்கள் என்பது எதிரணிக்கு பெரிய இலக்கல்ல. ஆனால் கடைசி இரு ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வந்தோம். அதுதான் எங்கள் அணியின் பண்பு.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையோடுதான் விளையாடினேன். ஏனெனில் புதிய பந்தில் டிம் செüதியும், டிரென்ட் போல்ட்டும் ஆக்ரோஷமாக வீசுவார்கள். ஆனால் பந்தின் தன்மை கொஞ்சம் மாறிவிட்டால் (சைனை இழப்பது) தவறு செய்யாமல் சிறப்பாக ஆடி ரன் குவிக்க முடியும். ஆட்டமிழக்காமலும் பார்த்துக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியும்.

பேட் செய்ய தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆடுகளத்தின் தன்மையை அறிந்துகொண்டேன். நாம் தவறு செய்யாதபட்சத்தில் ஆட்டமிழக்கமாட்டோம். சிறப்பாக ஆட முடியும் என்பதை தெரிந்து கொண்டேன்.

இதையெல்லாம்விட முக்கியமானது கோலியுடனான நல்ல பார்ட்னர்ஷிப்தான். நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்துவிட்டால், அது பந்துவீச்சாளர்களுக்கு கடினமாகிவிடும்” என்று தெரிவித்தார்.