I am thankful to csk captain dhoni said shane watson
சென்னை அணியின் கேப்டன் தோனிக்குத் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக சென்னை அணி வீரரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த ஷேன் வாட்சன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து 2015ம் ஆண்டும், டி20 கிரிக்கெட்டிலிருந்து 2016ம் ஆண்டும் ஓய்வு பெற்றார். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆடிவருகிறார்.
நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் சென்னை அணிக்காக ஆடிவரும் வாட்சன், சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த பங்களிப்பை அளிக்கிறார். சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் வாட்சன், எதிரணியின் பந்துவீச்சை பறக்கவிட்டு, சென்னை அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்கிறார்.
இந்நிலையில், ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஷேன் வாட்சனிடம், இந்த ஐபிஎல் சீசன் தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வாட்சன், எனக்கு சிறப்பாக அமைந்த ஐபிஎல் தொடர்களில் இந்த தொடரும் ஒன்று. தொடக்க வீரராக என்னை களமிறக்கிய, சென்னை அணியின் கேப்டன் தோனிக்கும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்கும் நன்றி கடன் பட்டிருக்கேன்.
உலகின் சிறந்த டி20 தொடரான ஐபிஎல்லில் இப்படியொரு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும் என நான் நினைத்து பார்த்ததே இல்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரருக்கு, அத்துடன் கிரிக்கெட் எதிர்காலமே பெரும்பாலும் முடிந்துவிடும். ஆனால் நான் பாக்கியசாலி என வாட்சன் தெரிவித்தார்.
