இந்திய அணியில் எம்.எஸ்.தோனி தற்போது பெற்றிருக்கும் இடத்தைக் கண்டு வியக்கிறேன் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

'ஏ சென்சுரி இஸ் நாட் எனஃப்' என்ற பெயரில் கங்குலி சுயசரிதை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் கடந்துவந்த பாதையில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவுக்குப் பிறகு, உலகக் கோப்பையை வென்று கொடுத்ததுடன், விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் மற்றொரு முன்னாள் கேப்டன் தோனி.

இதுகுறித்து கங்குலி அந்தப் புத்கத்தில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், "ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை படைக்கும் வீரர்களையும், ஆட்டத்தின்போது எழக்கூடிய எந்தவித கடினமான சூழலை எதிர்கொள்ளும் திறனும் கொண்ட வீரர்களையும் நான் தேடிக் கொண்டிருப்பேன்.

அப்படிப்பட்ட சூழலில் 2004-ஆம் ஆண்டில் தோனியை நான் கண்டேன். நான் நினைத்தது போன்ற திறமைகளை அவரிடம் கண்டேன். முதல் ஆட்டத்திலேயே அவரது திறமையை இனம் கண்டு கொண்டேன்.

2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எனது தலைமையிலான இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். அப்போது, தோனி இந்திய இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.

அவரை சிறந்த வீரர் என்று நான் மதிப்பிட்டது வீண்போகவில்லை. தற்போது அவர் பெற்றிருக்கும் இடத்தைக் கண்டு வியக்கிறேன்" என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.