i am back to form again by working hard - Pandya
கடுமையாக உழைத்ததன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா தன்னடக்கத்தோடு தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிக்ஸர்களை விளாசி வருகிறார் ஹார்திக் பாண்டியா. அவரை எப்படி தோற்கடிப்பது என்று திட்டம் தீட்டு வருகின்றனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 72 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார் பாண்டியா.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 43 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவிப்பதற்கு முன்னரே, ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ரன் குவித்துள்ளேன்.
கடந்த ஐபிஎல் போட்டி எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. எனினும் கடுமையாக உழைத்ததன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறேன். இதற்கு முன்னரும் அதிக அளவில் சிக்ஸர்களை அடித்திருக்கிறேன். ஆனால் இப்போது பிரமாண்ட சிக்ஸர்களை விளாசி வருகிறேன். இளம் வயது முதலே சிக்ஸர் அடிப்பதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
எந்த மாதிரியான ஷாட்டை ஆடப் போகிறோம் என்பதை தீர்மானிப்பதற்கு முன்பாக போட்டியின் சூழலை நன்றாக அறிந்துகொள்வது முக்கியமாகும். சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆடம் ஸம்பா பந்துவீச்சில் சிக்ஸரை விளாச முடியும் என நினைத்தேன். அதனால்தான் 7 ஓவர்கள் நிதானம் காட்டினேன். எனக்கான நேரம் வந்தபோது அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டேன்.
என்னை எந்த இடத்தில் களமிறக்கினாலும், அதை நான் சவாலாக நினைக்கமாட்டேன். மாறாக அதை எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே எடுத்துக் கொள்வேன். 4-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டபோது, நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் இந்த ஆட்டத்தில்தான் நான் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறப்பானதாகும்” என்று அவர் கூறினார்.
