புதுவையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த வலைகோல் பந்தாட்டப் போட்டியில் சண்டிகார் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
>
> கேந்திரிய வித்யாலயா சங்கம் சார்பில் புதுவை ஜிப்மரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வலைகோல் பந்தாட்டப் போட்டி நடந்தது. இந்த போட்டிகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.
>
> இதில் இந்தியாவில் இருந்து 25 மண்டலங்களை சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் உதயசூரியன் முன்னிலை வகித்தார்.
>
> சிறப்பு விருந்தினராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
>
> இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை சண்டிகார் அணி பெற்றது. அந்த அணி வீரர்களுக்கு முதல் பரிசாக 90 ஆயிரம் ரொக்கமும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த லக்னோ அணிக்கு 57 ஆயிரம் ரொக்கமும், வெள்ளிப்பதக்கமும், 3–வது இடத்தை பிடித்த ஐதராபாத் அணிக்கு 36 ஆயிரம் ரொக்கமும், வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.
>
> அதைத்தொடர்ந்து ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய–ஆசிரியைகள் செய்திருந்தனர்.

