Hockey India Pakistan qualify for round robin of Asia Cup
வங்காளதேசத்தில் நடந்து வரும் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
ஆசியக் கோப்பை ஹாக்கிபோட்டி வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கனவே தனது 2 லீக் ஆட்டங்களில் வென்று 6 புள்ளிகளுடன் உள்ளது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் ஆதிக்கம் இருந்து வந்தது. அதற்கேற்றார்போல் ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்கலேசனா சிங் முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் 2 கால்பகுதி ஆட்டங்களிலும் இருஅணிகளும் கோல் அடிக்கவில்லை.
நான்காவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமாக மோதினர். 44-வது நிமிடத்தில் இந்திய வீரர் ராமன் தீப் சிங்கும், 45-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங்கும் தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
கோல்அடிக்கவும், பந்தை கடத்தவும் மிகவும் திணறிய பாகிஸ்தான அணி 49-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அலி ஷான் கோல் அடித்து அணியின் மானத்தை காப்பாற்றினார். ஆனால், கடைசிவரை இந்திய அணியின் கோல் எண்ணிக்கையை சமன் செய்யாததையடுத்து, பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்து இந்திய அணி வென்றது. இதையடுத்து, 9 புள்ளிகளுடன் இந்திய அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
