செஸ் போட்டியில் உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷை வீழ்த்திய பிறகு அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா ராஜா காயை தூக்கி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்தியா மற்றும் அமெரிக்கா வீரர்களுக்கு இடையேயான 'செக்மேட்' கண்காட்சி செஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் உலக செஸ் சாம்பியனான இந்தியாவை சேர்ந்த டி.குகேஷை, உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஹிகாரு நகமுரா 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். குகேஷை தோற்கடித்த பிறகு ஹிகாரு நகமுரா செய்த செயல் தான் இப்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக உள்ளது.
ராஜாவை தூக்கி வீசிய அமெரிக்க வீரர்
அதாவது குகேஷை வீழ்த்திய குஷியில் திளைத்த ஹிகாரு நகமுரா, குகேஷின் செஸ் போர்டில் இருந்த 'ராஜா' காயை எடுத்து ரசிகர்களை நோக்கி ஆவேசமாக தூக்கி எறிந்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர். அதே வேளையில் குகேஷும், நடுவரும் அதிர்ச்சி அடைந்தனர். வெற்றியை கொண்டாட எத்தனையோ வழிகள் இருக்கும் நிலையில், செஸ் போட்டியையும், உலக சாம்பியன் குகேஷையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட ஹிகாரு நகமுராவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ஹிகாரு நகமுராவுக்கு குவிந்த கண்டனம்
நகமுராவின் செயல் பொருத்தமற்றது, அநாகரீகமானது மற்றும் அவமரியாதையானது என முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். தனது செயலுக்கு விளக்கம் அளித்த ஹிகாரு நகமுரா, ''இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் எதிராளியின் ராஜாவை தூக்கி எறிய வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையிலேயே இப்படி செய்தேன்'' என்றார்.
இந்த செயல் அநாகரீகமானது
ஆனால் செஸ் போட்டிகளில் இதுபோன்ற நாடகத்தனமான தருணங்களுக்கு இடமில்லை என்று ரஷ்ய கிராண்ட்மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல் நகமுரா இவ்வாறு செய்தது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இந்த செயலை செய்ய யார் திட்டமிட்டிருந்தாலும் அது அநாகரீகமானது. குகேஷ் உட்பட பல வீரர்கள் செஸ் விளையாட்டை மரியாதையுடன் அணுகுபவர்கள். நகமுராவின் செயல் பொருத்தமற்றது'' என்று விளாடிமிர் கிராம்னிக் தெரிவித்தார்.
குகேஷை அவமரியாதை செய்யவில்லை
அதே வேளையில் செஸ் நிபுணர் லெவி ரோஸ்மேன் ஹிகாரு நகமுராவின் மீது தவறில்லை என்று கூறியுள்ளார். ''போட்டி ஏற்பாட்டாளர்கள் முன்பே திட்டமிட்டதால் தான் நகமுரா அவ்வாறு செய்தார். அவர் குகேஷை எந்த அவமரியாதையும் செய்யவில்லை. தனிநபர் விளையாட்டான செஸ்ஸுக்கு இதுபோன்ற நாடகத்தனமான தருணங்கள் மூலம் அதிக விளம்பரம் தேட ஏற்பாட்டாளர்கள் முயன்றிருக்கலாம்'' என்று லெவி ரோஸ்மேன் தெரிவித்துள்ளார்.
