கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது. அதேபோலவே ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் டெஸ்ட் போட்டி “பிங்க்” டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் கடந்த 2008ம் ஆண்டு இறந்தார். ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த காலத்திலேயே கிளென் மெக்ராத்தும் ஜேனும் சேர்ந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் உதவி செய்வதற்காக மெக்ராத் ஃபௌண்டேஷனை தொடங்கினர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மெக்ராத்தின் மனைவி 2008ம் ஆண்டு உயிரிழந்தார். 

இதையடுத்து 2009ம் ஆண்டு முதல் ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைத்து, அந்த போட்டியில் திரட்டப்படும் நிதி, மெக்ராத்தின் ஃபௌண்டேஷனுக்கும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. 

இதுதான் சிட்னி டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்பட காரணம். இந்த போட்டியில் ஸ்டம்புகள், பவுண்டரி லைன், ஸ்டேடியம் பேனர்கள் என அனைத்துமே பிங்க் நிறத்தில் இருக்கும். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் கோலி தனது பேட்டின் கைப்பிடியை பிங்க் நிறத்தில் மாட்டி வந்ததோடு குளௌசும் பிங்க் நிறத்திலே அணிந்திருந்தார். 

இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஜேன் மெக்ராத் டே என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் ரசிகர்கள் அனைவருமே பிங்க் நிற உடையணிந்து ஆதரவு தருவார்கள். சிட்னி மைதானத்தில் இருக்கும் பெண்களுக்கான பிரிவு, ஜேன் மெக்ராத் ஸ்டாண்ட் என்று அன்று ஒருநாள் மட்டும் அழைக்கப்படும்.