Head Coach Interview Finished Quick notice - Ganguly
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நிறைவடைந்ததையொட்டி பயிற்சியாளரை தேர்வு செய்ய சில நாள்கள் கால அவகாசம் தேவைப்படுவதால், பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கங்குலி தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலை சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி நடத்தியது. சச்சின் இலண்டனில் இருப்பதால் ஸ்கைப் மூலம் பங்கேற்றார்.
ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இவர்களில் சேவாக் மட்டுமே நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டார்.
நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி கூறியது:
ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகிய 5 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் பில் சிம்மன்ஸ் நேர்காணலில் தன்னால் பங்கேற்க இயலாது என தெரிவித்துவிட்டார்.
பயிற்சியாளரை இறுதி செய்ய எங்களுக்கு சில நாள்கள் காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்துள்ளோம். இலங்கை டெஸ்ட் தொடருக்கு ஓரளவு காலஅவகாசம் இருப்பதால், பயிற்சியாளரை அறிவிப்பதில் அவசரம் தேவையில்லை என கருதுகிறோம்.
புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் 2019 உலகக் கோப்பை போட்டி வரையில் அந்தப் பதவியில் இருப்பார். பயிற்சியாளர் விஷயத்தைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
