ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடனுக்கு தலையில் அடிபட்டு அவர் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன். ஆஸ்திரேலிய அணிக்காக 1993ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரை ஆடினார். இவரது அதிரடியான தொடக்கம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளது. எதிரணி பவுலர்களை தொடக்கத்திலேயே அடித்து நொறுக்கி எதிரணியை நிலைகுலைய செய்துவிடுவார் ஹைடன். 

அதிலும் கில்கிறிஸ்ட்டும் இவரும் சேர்ந்து எதிரணியை செய்த சம்பவங்கள் ஏராளம். இருவரும் இணைந்து எதிரணிக்கு ஒரு காட்டு காட்டிவிட்டுத்தான் செல்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் 400 ரன்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் அடித்திருப்பது ஹைடன் தான். ஒரு இன்னிங்ஸில் 380 ரன்கள் குவித்து லாராவிற்கு அடுத்த இடத்தில் ஹைடன் இருக்கிறார். 

கடந்த 2009ம் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் ஹைடன். இந்நிலையில், ஹைடன் அண்மையில் ஒரு விபத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஹைடன், சிகிச்சை பெறும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, தான் நலமாக இருப்பதாக ரசிகர்களுக்கு தகவல் சொல்லியுள்ளார். 

 

ஹைடனின் நிலையை கண்டு ரசிகர்கள் சோகமடைந்தாலும், அவர் நலமாக இருப்பதாக கூறியதால் ஆறுதல் அடைந்துள்ளனர்.