2018ம் ஆண்டில் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. 

சர்வதேச டி20 போட்டிகளை தவிர ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், பிக் பேஷ் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

எனவே அனைத்து வீரர்களும் நிறைய டி20 போட்டிகளில் ஆடிவருகின்றனர். இந்திய வீரர்கள் ஐபிஎல்லைத் தவிர மற்ற லீக் தொடர்களில் கலந்துகொள்வதில்லை. மற்றபடி அனைத்து நாட்டு வீரர்களும் அனைத்து லீக் தொடர்களிலும் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், இந்த ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டி20 லீக் போட்டிகள் என ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்ட ஓர் அணியை தேர்வு செய்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. 

இந்த ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 172 ரன்களை குவித்து, சர்வதேச டி20-யில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஆரோன் ஃபின்ச்சையும் இந்தியாவின் ஷிகர் தவானையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். ஷிகர் தவான், இந்திய அணியிலும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் சில சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார். 

மூன்றாவது வீரராக நியூசிலாந்தின் கோலின் முன்ரோவையும் நான்காவது வீரராக ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ்(டெல்லி டேர்டெவில்ஸ்) அணிக்காக ஆடி கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த இந்தியாவின் ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ளார்.

அதேபோல டி20 கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்த வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன், ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா. ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரசல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த இந்த ஆண்டின் சிறந்த டி20 அணி:

ஆரோன் ஃபின்ச், ஷிகர் தவான், கோலின் முன்ரோ, ரிஷப் பண்ட், கிளென் மேக்ஸ்வெல், ஆண்ட்ரே ரசல், டுவைன் பிராவோ, சுனில் நரைன், ரஷீத் கான், ஜோஃப்ரா ஆர்ச்சர், பில்லி ஸ்டேன்லேக்.