இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, வெற்றி முனைப்பில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை எடுத்தது. 

6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களுடன் முதல் நாள் ஆட்டத்தை முடித்த இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதன்பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, உணவு இடைவேளை வரை விக்கெட்டுகளை இழக்கவில்லை. அதன்பிறகு ஹர்திக் பாண்டியாவின் அபாரமான ஸ்விங் பவுலிங்கில் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட், பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பாண்டியா. பாண்டியாவின் அபார பந்துவீச்சால், 54 ரன்கள் வரை விக்கெட்டே இழக்காமல் இங்கிலாந்து அணி, 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆல் ரவுண்டரான அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பெரியளவில் பங்களிப்பு செய்யாததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பவுலிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதை போலவே, அறிமுக போட்டியிலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5 கேட்ச்களை பிடித்து அசத்தினார். அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், சிக்ஸருடன் தனது ரன் கணக்கைத் தொடங்கி மிரட்டினார். பேட்டிங்கை போலவே விக்கெட் கீப்பிங்கிலும் மிரட்டிவிட்டார். பறந்தும் டைவ் அடித்தும் பந்துகளை பிடித்தார் ரிஷப். அறிமுக இன்னிங்ஸிலேயே 5 கேட்ச்களை பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தார் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்டிற்கு முன்னதாக, டாம்ஹனே, கிரண் மோர் மற்றும் நமன் ஓஜா ஆகிய மூவரும் அறிமுக போட்டியிலேயே 5 கேட்ச்களை பிடித்துள்ளனர்.