பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் எதிரொலியாக ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் சஸ்பெண்ட்டை அதிரடியாக ரத்து செய்துள்ளது பிசிசிஐ. 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. கிரிக்கெட் அல்லாத ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவத்திற்கு வருந்தி பிசிசிஐ-யிடம் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கோரினார். எனினும் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதனால் ஆஸ்திரேலியாவிலிருந்து இருவரும் நாடு திரும்பினர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதில் கருத்து முரண் ஏற்பட்டதை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை வரும் பிப்ரவரி 5ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் வரை ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுலின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து சட்ட ஆலோசகர் பிஎஸ்.நரசிம்மாவுடன் கலந்தாலோசித்த பிறகு, ராகுல் மற்றும் பாண்டியாவிற்கு விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளது பிசிசிஐ.  

இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து விரைகிறார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இணைகிறார். அதேபோல ராகுல் இந்தியா ஏ அணியில் இணைகிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ரஹானே தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் ஆடிவருகிறது. 

கடந்த சில வாரங்களாக கடும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் பாண்டியா மற்றும் ராகுலுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா ஏ அணியில் ராகுல் இணைகிறார். ராகுல் டிராவிட்டின் ஆலோசனைகளும் அவரது அறிவுரைகளும் ராகுலுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.