இந்திய அணி தேர்வாளர்களை முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் சரமாரியாக தாக்கியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. 

இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், முரளி விஜய், கருண் நாயர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயர், 5ல் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. அதுவே கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. கவாஸ்கர் கூட கருண் நாயர் ஆடவைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் சேர்க்கப்படவில்லை. ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாததற்கு கங்குலி அதிருப்தி தெரிவித்திருந்தார். அதேபோல் அதற்கு ஹர்பஜன் சிங்கும் அதிருப்தி தெரிவித்திருந்தார். தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என யாருக்காவது புரிகிறதா? என டுவிட்டரில் கேள்வியெழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், மீண்டும் தேர்வுக்குழு மீதான அதிருப்தியை ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், வீரர்கள் தேர்வில் உள்ள மர்மங்கள் நீங்க வேண்டும். தேர்வுக்குழு எதனடிப்படையில் வீரர்களை தேர்வு செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஹனுமா விஹாரியை அணியில் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை என்றால் என்ன செய்யும். நான் எந்த வீரரையும் சரியாக ஆடக்கூடாது என்று நினைக்கவில்லை. விஹாரிக்கு என் வாழ்த்துக்கள். ஆனால், சரியாக ஆடவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு அடுத்து மீண்டும் கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.