harbhajan singh opinion about first match of csk vs mumbai indians
ஐபிஎல் 11வது சீசன் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளாக களமிறங்காத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனியின் தலைமையில் சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது. அதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதுவரை சென்னை அணிக்காக ஆடிவந்த தமிழக வீரர் அஸ்வின், இந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக ஆடுகிறார். கடந்த 10 சீசனிலும் ஹர்பஜன் மும்பை அணிக்காக ஆடினார்.
10 ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடிவந்த ஹர்பஜனை இந்த முறை அந்த அணி புறக்கணித்துவிட்டது.
ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பேசிய ஹர்பஜன் சிங், முதல் 10 சீசன்களுக்கு எனது தாய் மைதானமாக இருந்த மும்பை வான்கடே மைதானத்தில், நான் இதுவரை ஆடிய மும்பை அணியை எதிர்த்து ஆடுவது, எனக்கு உணர்ச்சி ததும்பும் போட்டியாகவே அமையும்.
ஆனால் தொழில்பூர்வமான வீரர், இவற்றையெல்லாம் கடந்து அணிக்காக ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான் நானும் எதிர்நோக்குகிறேன். இதற்கு முன்னதாக பல முக்கியமான போட்டிகளில் சென்னையும் மும்பையும் மோதியுள்ளன.
மும்பை அணியில் 10 சீசன்கள் ஆடியுள்ளேன். எனவே மும்பை இந்தியன்ஸ் ஆடும் விதம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 10 ஆண்டுகளாக ஆடிவருவதால் ரகசியம் என்று எதுவும் இல்லை. மும்பை அணியின் திட்டமிடுதல் குழுவில் நானும் இருந்திருப்பதால், அந்த அணியின் அணுகுமுறை குறித்து எனக்கு தெரியும். இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு அந்த அணியை வீழ்த்த சிறப்பாக விளையாட வேண்டும்.
மும்பை அணியை வீழ்த்துவதற்கான ஆட்கள், சென்னை அணியில் இருக்கிறார்கள். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று சென்னை ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஹர்பஜன் தெரிவித்தார்.
