இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹனுமா விஹாரி, முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தவான் 3 ரன்களிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு ராகுலும் புஜாராவும் ஓரளவிற்கு நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் இருவருமே தலா 37 ரன்களில் அவுட்டாகினர். கோலியும் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். 

களத்தில் ஓரளவிற்கு நிலைத்து நிற்க தொடங்கிய வீரர்கள் மூவருமே அதை பயன்படுத்தி சிறப்பாக ஆடாமல், விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 160 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதன்பிறகு விஹாரியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். விஹாரி 25 ரன்களும் ஜடேஜா 8 ரன்களும் எடுத்திருந்த நிலையில், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. நேற்றைய ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி 174 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை விஹாரியும் ஜடேஜாவும் தொடர்ந்தனர். இன்றும் சிறப்பாகவே ஆடிவருகின்றனர். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் ஆகிய நால்வரும் மாறி மாறி பந்து வீசிவருகின்றனர். எனினும் விஹாரியும் ஜடேஜாவும் இவர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு தெளிவாக ஆடிவருகின்றனர். 

சிறப்பாக ஆடிய விஹாரி, அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். ஜடேஜாவும் விஹாரிக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிவருகிறார். விஹாரி - ஜடேஜா ஜோடி, 70 ரன்களை கடந்து ஆடிவருகிறது. இந்திய அணியின் ஸ்கோர் 230ஐ கடந்துவிட்டது.