ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்கப்போவது யார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ரோஹித் சர்மா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் மயன்க் உடன் இறங்கப்போவது ஹனுமா விஹாரியா? ரோஹித் சர்மாவா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டி நாளை மெல்போர்னில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பிவந்த தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவருமே அடுத்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மயன்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மயன்க் அகர்வால் இந்த போட்டியில்தான் அறிமுகமாகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் சிறப்பாக ஆடிவரும் அகர்வால் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே பெரியளவில் ஆடுவது கடினமான விஷயம். அதையும் மீறி மயன்க் அகர்வால் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

ஹனுமா விஹாரியின் பேட்டிங் டெக்னிக் சிறப்பாக இருப்பதால் அவரை மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற கருத்தை கும்ப்ளே உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ரோஹித் சர்மாவும் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால் அகர்வாலுடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. 

இந்திய அணியின் தொடக்க ஜோடி சொதப்புவது மிகப்பெரிய பாதிப்பை இதுவரை ஏற்படுத்தியுள்ளது. எனவே நிதானமாக நல்ல தொடக்கத்தை தொடக்க ஜோடி அமைத்து கொடுக்கும் பட்சத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவரும் சிறந்த ஸ்கோரை எட்டி வலுவான நிலையை அடைய வைப்பர். அந்த வகையில் கடந்த போட்டியில் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிய ஹனுமா விஹாரி மீது நம்பிக்கை வைத்து அணியின் நலன் கருதி அவரை தொடக்க வீரராக களமிறக்குவதற்கான வாய்ப்புகளே உள்ளன. ரோஹித் சர்மா அவர் ஏற்கனவே களமிறங்கிவந்த 6ம் வரிசையிலேயே தான் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, மயன்க் அகர்வால் பெயருக்கு அடுத்தபடியாக ஹனுமா விஹாரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. கேப்டன், துணை கேப்டன் பெயர்களுக்கு அடுத்து வீரர்களின் பேட்டிங் வரிசைப்படி பெயர்கள் பட்டியலிடப்படுவதுதான் வழக்கம். அந்த வகையில் ஹனுமா விஹாரிதான் அகர்வாலுடன் இறங்கப்போகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.