விராட் கோலி ஒரு கேப்டனாக மேம்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் கிடையாது. ஆனால் அவரது கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவரை ஒரு முழுமையான முதிர்ச்சியான கேப்டனாக முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பார்க்கவில்லை. 

கோலியின் கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் முறை, வீரர்களை கையாளும் முறை ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. இவற்றில் எல்லாம் கோலியின் கேப்டன்சியில் குறைபாடுகள் இருப்பதை பார்க்கமுடிகிறது. வீரர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களை எப்படி வழிநடத்தி அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி அவ்வப்போது அறிவுரைகளை வழங்கிவருகிறார். ஆனால் அவற்றையெல்லாம் கோலி கவனிக்கிறாரா? கங்குலியின் அறிவுரைகளுக்கு செவி மடுக்கிறாரா? என்பது தெரியவில்லை. 

கோலியின் கேப்டன்சி சாதனைகள் வெற்றிகளின் அடிப்படையில் எண்களை வைத்து பார்க்கையில் சிறப்பாகத்தான் உள்ளது. ஆனால் அவரது கேப்டன்சி திறன் சிறப்பாக இல்லை. அவர் இன்னும் முதிர்ச்சியடைய வேண்டியிருக்கிறது. 

கோலியின் தலைமையில் இந்திய அணி 41 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 23 வெற்றிகளை பெற்றுள்ளது. தோனிக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாக கோலி உள்ளார். அதேபோல் கோலியின் கேப்டன்சியில் இதுவரை ஆடியுள்ள 52 ஒருநாள் போட்டிகளில் 39ல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

இப்படி, எண்களின் அடிப்படையில் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருந்தாலும் அவர் ஒரு முதிர்ச்சியான கேப்டனாக இல்லை என முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள குண்டப்பா விஸ்வநாத், கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். ஆனால் ஒரு கேப்டனாக வெளிநாட்டு தொடர்களை கோலி வெல்ல வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக எல்லா நாடுகளிலும் கோலி தன்னை நிரூபித்துள்ளார். ஆனால் கேப்டனாக கோலி மீது இன்னும் நிறைய எதிர்பார்ப்புகல் உள்ளன. அவர் ஒரு இளம், முதிர்ச்சியற்ற கேப்டனாகவே இன்னும் உள்ளார். ஆனால் ஒருநாள், அவர் முதிர்ந்த கேப்டனாகிவிடுவார் என்று நம்புவதாக குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.