நியூசிலாந்து அணி வீரர் கிராண்ட் எலியட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கிராண்ட் எலியட், நியூசிலாந்து அணிக்காக 5 டெஸ்ட், 83 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 10 ஆண்டுகாலம் நியூசிலாந்துக்காக ஆடிய எலியட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2015 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இவரது ஆட்டம் மறக்க முடியாதது. ஒவ்வொரு காலக்கட்டத்திலுமே சிறந்த அணியாக திகழ்ந்தாலும் ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணி, 2015ல் டிவில்லியர்ஸின் கேப்டன்சியில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. 

அரையிறுதி வரைக்கும் சென்றது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் உலக கோப்பையை கனவை தகர்த்தது இந்த கிராண்ட் எலியட் தான். மழை காரணமாக முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 43 ஓவர்கள் மட்டுமே ஆடியது. 43 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 281 ரன்கள் எடுத்தது. 

டக்வொர்த் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 298 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி வரை ஆட்டமிழக்காமல், 84 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தார் எலியட். கடைசி பந்திற்கு முந்தைய பந்தில் சிக்ஸர் விளாசி, தென்னாப்பிரிக்காவின் கனவை தகர்த்து, நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. 

இந்த போட்டியில் தோற்றதும் இம்முறையும் கோப்பையை வெல்ல முடியாததை நினைத்து அப்போதைய தென்னாப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ், மோர்னே மோர்கல் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மட்டுமல்லாது, அந்த வீரர்களின் கண்ணீர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் உருக வைத்தது. தென்னாப்பிரிக்காவின் கனவை தகர்த்த எலியட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.