தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பான்கிராஃப்ட் பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரும் சிக்கினர். பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. 

இந்த விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கும் அணிக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கியது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி தங்கள் கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையையும் ரசிகர்களின் ஆதரவையும் மீட்டெடுக்க போராடிவருகிறது. 

பந்தை சேதப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியதை நினைத்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் மனம் வருந்தி கண்ணீர் விட்டனர். 9 மாதங்கள் தடை பெற்ற பான்கிராஃப்ட்டின் தடை வரும் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, நடந்துவரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக பான்கிராஃப்ட் ஆட உள்ளார். 

இந்நிலையில், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு கில்கிறிஸ்டிடம் பேட்டியளித்த பான்கிராஃப்ட், பந்தை சேதப்படுத்த தன்னை ஊக்கப்படுத்தியது டேவிட் வார்னர் தான் என்று பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் யார் மீதும் பழிபோட விரும்பவில்லை என்றும் தான் செய்த தவறுக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார் பான்கிராஃப்ட். 

வார்னர் தான் தன்னை ஊக்கப்படுத்தியதாக பான்கிராஃப்ட் கூறியது, முடிந்துபோன சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மூவர் தடை பெற்றிருக்கும் நிலையில், கடைசியில் பழி என்னவோ வார்னர் மீது வந்து விழுந்திருக்கிறது. எனவே இதுகுறித்து வார்னர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆடம் கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார். அவர்தான் மீதான குற்றச்சாட்டுக்கு விரைவில் விளக்கமளிக்க வேண்டுமென கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.