மெல்போர்ன் டெஸ்டில் ஹனுமா விஹாரி செய்த ஒரு காரியத்தை சிறந்த சம்பவமாக குறிப்பிட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட். 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட வென்றிராத இந்திய அணி நடப்பு தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைக்கப்போவது உறுதியாகிவிட்டது. 2-1 என இந்த தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. கடைசி போட்டியிலும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கிறது. எனவே இந்த தொடரை வெல்வது உறுதி. 

இந்த தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான பெரிய வித்தியாசமாக இருந்தது புஜாராவின் பேட்டிங் தான். நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் 4 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 3 சதங்கள் புஜாரா அடித்தவை, ஒரு சதம் மட்டும் கோலி அடித்தார். ஒரு பேட்ஸ்மேன் சதமடிப்பது முக்கியமல்ல, அந்த சதம் அணியின் வெற்றிக்கு பயன்பட்டிருக்கிறதா என்பதில் தான் அந்த சதத்துக்கான மதிப்பு உள்ளது. 

அந்த வகையில் புஜாராவின் சதம் அபாரமானது. புஜாரா சதமடித்த அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. சிட்னியில் நடந்துவரும் போட்டியில் 193 ரன்களை குவித்தார் புஜாரா. இந்த போட்டியிலும் இந்திய அணியின் கை ஓங்கியிருக்கிறது. 

அடிலெய்டு, பெர்த், சிட்னி ஆகிய மூன்று போட்டிகளிலுமே முதல் விக்கெட்டை இந்திய அணி விரைவில் இழந்துவிட்டதால் புஜாரா, பெரும்பாலும் முதல் 10 ஓவர்களுக்கு உள்ளாகவே களத்திற்கு வர நேர்ந்தது. 10 ஓவர்கள் என்று கூட சொல்ல முடியாது, முதல் ஒருசில ஓவர்களிலேயே பெரும்பாலான இன்னிங்ஸ்களில் களத்திற்கு வந்துவிட்டார் புஜாரா. ஆனால் மூன்றாவது போட்டியில்தான் சற்று தாமதமாக களத்திற்கு வந்தார். அதற்கு காரணம், தொடக்க ஜோடி விரைவில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காததுதான். 

முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் நீக்கிவிட்டு அறிமுக வீரர் மயன்க் அகர்வாலுடன் ஹனுமா விஹாரியை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டது இந்திய அணி. அவரும் பெரிதாக ரன் அடிக்கவில்லை என்றாலும், 10 ஓவர்களுக்கும் மேலாக பேட்டிங் செய்து, மயன்க் அகர்வாலுடன் சேர்ந்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். 20வது ஓவருக்கு அருகில்தான் முதல் விக்கெட்டை பறிகொடுத்தார் விஹாரி. அந்த இன்னிங்ஸில் மட்டும்தான் இந்திய அணியின் தொடக்க ஜோடி சுமார் 20 ஓவர்கள் ஆடியது. 

மெல்போர்ன் டெஸ்டில் அறிமுக தொடக்க ஜோடியை பரிசோதித்த இந்திய அணியின் தைரியத்தை பாராட்டியுள்ள கில்கிறிஸ்ட், விஹாரி செய்த காரியத்தையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ”தி இந்து” ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்திய அணி விரைவாகவும் ஸ்மார்ட்டாகவும் செயல்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்காத தொடக்க ஜோடியை மூன்றாவது போட்டியில் அதிரடியாக நீக்கிவிட்டு புதிய ஜோடியை தைரியமாக முயற்சித்தது. விஹாரி 10 ஓவர்கள் ஆடினார், அவர் பெரிதாக ரன்கள் அடிக்காவிட்டாலும் அவர் செய்த மிகப்பெரிய காரியம் என்னவென்றால், இந்திய அணியின் விலைமதிப்பில்லா வீரரான புஜாராவை புதிய பந்து இருக்கும்போதே களத்திற்கு வராமல் பார்த்துக்கொண்டதுதான் என கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.