தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட், இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில், மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான சஹா உடற்தகுதி பெற்று திரும்பிவந்தால், என்ன ஆகும்? யாருக்கு வாய்ப்பு? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வுபெற்ற பிறகு, ரித்திமான் சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த சஹா, அதன்பிறகு இந்திய அணியில் ஆடவேயில்லை. இதற்கிடையே ஐபிஎல்லில் ஆடி காயத்தை வளர்த்துக்கொண்டார். அதிலிருந்து அவர் மீள்வதற்குள்ளாக ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட், இங்கிலாந்து சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என காலம் ஓடிவிட்டது.
சஹா விட்டுச்சென்ற இடத்தை பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை வைத்து நிரப்ப முயன்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார்.
ரிஷப் பண்ட் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். விக்கெட் கீப்பிங்கில் சில குறைகள் இருந்தாலும், பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்துவிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் விளாசிய ரிஷப், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் அடித்து சதத்தை தவறவிட்டார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெஸ்ட் அணியில் தனது இடத்தை மிக வலுவாக தக்கவைத்துள்ளார் ரிஷப்.
இதுவரை 9 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 696 ரன்களை குவித்துள்ளார். 2 சதங்களுமே சாதனை சதங்கள். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே முதன்முறையாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட், இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில், மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான சஹா உடற்தகுதி பெற்று திரும்பிவந்தால், என்ன ஆகும்? யாருக்கு வாய்ப்பு? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட், ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை பார்க்கையில் உற்சாகமாக இருக்கிறது. அவர் தயக்கமே இல்லாமல் அருமையாக அடித்து ஆடுகிறார். எதிர்காலத்தில் அதிரடியுடன் சற்று தடுப்பாட்டத்தையும் கலந்து ஆடுவார் என நம்புகிறேன். சஹா வந்துவிட்டால் என்ன செய்வதென்பதை அணி தான் முடிவு செய்ய வேண்டும். சஹாவின் உயர்தர விக்கெட் கீப்பிங் தேவையா அல்லது ரிஷப் பண்ட்டின் கூடுதல் ரன்கள் தேவையா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
சஹா வந்துவிட்டால் ரிஷப் பண்ட்டின் நிலை என்ன? என்ற கேள்வியை ரசிகர் ஒருவரும் முன்வைக்க, இதுகுறித்து ஈஎஸ்பினில் சஞ்சய் மஞ்சரேக்கரும் அகார்கரும் விவாதித்தனர். அப்போது, சஹா மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தான். அவர் திடீரென காயத்தால் விலகிய நேரத்தில் மற்றொரு வீரர் அபாரமாக ஆடி அவரது இடத்தை பிடித்துவிடுவது என்பது கொடுமையான விஷயம் தான். ஆனால் அதற்காக ரிஷப் பண்ட்டை அணியிலிருந்து நீக்க முடியாது என்று அகார்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எனவே இனிமேல் சஹா உடற்தகுதியுடன் திரும்பி வந்தாலும் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 6, 2019, 2:22 PM IST