தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி பேட்டிங் செய்த விதம் வியப்பை ஏற்படுத்தியது. 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, 3 ஒருநள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. 

அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் தென்னாப்பிரிக்க அணி பயிற்சி போட்டியில் ஆடியது. ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கேப்டனாக செயல்பட்டார். ‘

நேற்று நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்கு ஆடினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி 42 ஓவரில் வெறும் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணி, 37வது ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது லுங்கி நிகிடி வீசிய 10வது ஓவரில் பேட்டிங் செய்த ஜார்ஜ் பெய்லி, விசித்திரமாக பேட்டிங் செய்தார். பவுலருக்கு முதுகை காட்டியபடி பேட்டிங் செய்தார். இது பவுலரை ஏளனம் செய்யும் விதமாகவே பார்க்கப்படுகிறது. நீ என்ன செய்வாய்? பார்த்துவிடுகிறேன் என்பதுபோல் இருந்தது அந்த தோரணையும் பேட்டிங்கும். 

பெய்லி பேட்டிங் ஆடுவதை பார்த்து தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் உள்ளிட்ட வீரர்கள் சிரித்தனர்.