கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாஹலின் சுழலில் சுருண்டது. அந்த அணி 230 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. சாஹல் 42 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

231 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தோனி - கேதர் ஜாதவ் ஜோடி பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தது. கடைசி ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் தோனி 87 ரன்களும் கேதர் ஜாதவ் 61 ரன்களும் எடுத்திருந்தனர். 

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும், மூன்று போட்டிகளிலும் அரைசதங்கள் அடித்து இந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன்களை குவித்த தோனி தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இவர்கள் இருவருக்கும் தலா 500 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பில் வெறும் 35,000 ரூபாய். இது மிகவும் குறைவான தொகை என்பதால், கடுப்பான கவாஸ்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர், போட்டி தொடரை நடத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஒளிபரப்பு உரிமை, ஸ்பான்ஸர்ஸ் என அதிகமாக சம்பாதித்திருக்கும். பெரிய தொகை ஸ்பான்ஸராக கிடைப்பதற்கு காரணமே, வீரர்கள் தான். அப்படியிருக்கையில், அவர்களுக்கு ஏன் நல்ல தொகையை பரிசாக வழங்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

வீரர்கள் தான் அதிமான பணத்தை சம்பாதிக்க காரணமாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு அதிகமான பரிசுத்தொகையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கவாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.