ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷாவுடன் யார் தொடக்க வீரராக களமிறங்கலாம் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என சமனானது. இதையடுத்து வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியமானது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

இந்திய அணியில் முரளி விஜய் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நடுவரிசையில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. 

தொடக்க வீரர்களுக்கான போட்டியில் முரளி விஜய், பிரித்வி ஷா, ராகுல் ஆகிய மூவரும் உள்ளனர். இங்கிலாந்து தொடரில் பாதியில் நீக்கப்பட்ட முரளி விஜய்க்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கிடையே அவர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடி சதமடித்து அசத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் மீண்டும் முரளி விஜய் இடம் பிடித்துள்ளார். 

இளம் வீரர் பிரித்வி ஷா தொடக்க வீரராக களமிறங்குவது உறுதி. அவருடன் யார் இறங்குவது என்பதுதான் சந்தேகமாக உள்ளது. ராகுல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் சொதப்பிவிட்டார். எனவே வெளிநாடுகளில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள முரளி விஜய் தான் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பிரித்வி ஷா கண்டிப்பாக முதல் டெஸ்டில் தொடக்க வீரராக ஆடுவார். அவர் நியூசிலாந்தில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியாவில் நடந்த தொடரிலும் சிறப்பாக ஆடினார். எனவே அவர் தொடக்க வீரராக களமிறங்குவார். அவருடன் ராகுலை காட்டிலும் முரளி விஜய் களமிறங்கினால் சரியாக இருக்கும். முரளி விஜயும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கலாம். வெளிநாடுகளில் நீண்டகாலமாகவே சிறப்பாக ஆடிவருபவர் முரளி விஜய். இங்கிலாந்துக்கு எதிராக அவர் சரியாக ஆடாவிட்டாலும் அது பெரிய விஷயமல்ல. எவ்வளவு சிறந்த வீரருக்கும் அது நடக்கும். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து முரளி விஜய் ஒரு மிகச்சிறந்த வீரர். அவரும் பிரித்வியும் இறங்குவதுதான் சரியாக இருக்கும். பிரித்வி அடித்து ஆடுவார், முரளி விஜய் நிதானமாக ஆடுவார். இந்த ஜோடி சிறப்பானதாக இருக்கும் என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.