தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்த பிசிசிஐ, உடனடியாக அவர்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களில் இடம்பெற்றிருந்த இருவரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்ட பிசிசிஐ, அவர்களுக்கான மாற்று வீரர்களையும் அதிரடியாக அறிவித்தது. பாண்டியாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ராகுல் மற்றும் பாண்டியா ஆகிய இருவரும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பிரச்னையாக வெடிக்க, கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சியில் அவர்கள் எப்படி கலந்துகொண்டார்கள்? அவர்களை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதித்தது யார்? என்பன போன்ற பல அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன. இதையடுத்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவும் மற்ற வீரர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ. 

இந்நிலையில், பிசிசிஐ-யின் அதிரடி நடவடிக்கை குறித்து பேசிய கவாஸ்கர், அணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் அணியில் இருக்கக்கூடாது. அவர்களை சஸ்பெண்ட் செய்த பிறகு அவர்கள் அணி வீரர்களுடன் ஒரே ஓய்வறையில் இருப்பது சரியாக இருக்காது. எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர்களை நாடு திரும்புமாறு பிசிசிஐ உத்தரவிட்டது சரிதான். அவர்கள் அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதுதான் சரி என்று கவாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.