ஹனுமா விஹாரி பதற்றப்படாமல் நிதானமாக ஆடுவதாகவும் அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது எனவும் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என ஏற்கனவே இங்கிலாந்து அணி வென்றுவிட்ட நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. அலெஸ்டர் குக்கும் ஜோ ரூட்டும் களத்தில் உள்ளனர். 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 என்ற ஓரளவிற்கு நல்ல ரன்னை எடுத்ததற்கு அறிமுக வீரர் விஹாரியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். 160 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு ஜோடி விஹாரி-ஜடேஜா ஜோடி, 7வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். 

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷீத் என அனைவரையுமே மாற்றி மாற்றி பயன்படுத்தியது. ஆனால் மிகவும் பொறுமையாக பதற்றப்படாமல் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, இந்திய அணியை மோசமான நிலையிலிருந்து காப்பாற்றி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எடுக்க உதவியது. 

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த விஹாரி 56 ரன்களில் அவுட்டானார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஜடேஜா 86 ரன்கள் எடுத்திருந்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 292 ரன்களை எட்டியது. 

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது வர்ணனையாளர்கள் கலந்துரையாடலில், விஹாரியின் ஆட்டத்தை கவாஸ்கர் வெகுவாக பாராட்டினார். கருண் நாயருக்கு பதிலாக விஹாரிக்கு ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, கருண் நாயரின் பக்கத்தில் நியாயத்திற்கு ஆதரவாக நின்ற கவாஸ்கர், அதேநேரத்தில் விஹாரி நன்றாக ஆடியதும் அவரை பாராட்டவும் செய்தார். 

ஹனுமா விஹாரி பதற்றப்படாமல் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் களத்தில் நின்று தெளிவாக ஆடினார். இவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது என வாழ்த்தவும் செய்தார். காலப்போக்கில் அணிக்கு தேவைப்பட்டால் இவரை தொடக்க வீரராக கூட பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையையும் வழங்கினார்.