ஒரு கேப்டன் தான் வீரரை உருவாக்க வேண்டும் எனவும் தற்போதைய இந்திய அணியில் இருக்கும் சிறந்த திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டியது கேப்டனின் பொறுப்பு எனவும் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை சொதப்பலான பேட்டிங்கால் இந்திய அணி இழந்தது. விராட் கோலி மட்டுமே அனைத்து இன்னிங்ஸ்களிலுமே சிறப்பாக ஆடினார். இந்த தொடரில் இந்திய அணி சார்பில் கோலியும் புஜாராவும் மட்டுமே சதமடித்துள்ளனர். ரஹானே ஒருசில இன்னிங்ஸ்களில் சிறப்பாக ஆடினாலும் சில முக்கியமான நேரங்களில் கவிழ்த்துவிட்டார். 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் கோலியை தவிர மற்ற எந்த வீரரும் சரியாக ஆடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, ராகுல், ரஹானே ஆகியோர் சோபிக்கவில்லை. சொதப்பலான பேட்டிங்கால் இந்திய அணி தொடரையும் இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலியாக கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஒரு கேப்டன் என்ற முறையிலும் சீனியர் வீரர் என்ற முறையிலும் தன்னால் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியவில்லை என்று கோலி கூறியிருப்பது, பயிற்சியாளரின் சிந்தனையிலிருந்து அவர் மாறுபட்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது. 

ஒரு கேப்டன் தான் வீரர்களை உருவாக்க வேண்டும். கோலி ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒரு கேப்டனாக கோலி எப்படி செயல்பட வேண்டுமென அவரை சுற்றியிருப்பவரகள்(சாஸ்திரியை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். எவற்றை எல்லாம் வளர்த்துக்கொண்ட வேண்டியிருக்கிறது என்பதை கோலிக்கு சொல்ல வேண்டும். 

இந்திய அணியில் புஜாரா, ராகுல், ரஹானே போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களது முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவந்து அணியை வெற்றி பெற வைப்பது கேப்டனின் கடமை. 1996ல் டிராவிட் அணியில் அறிமுகமாகும்போது, அவர் இப்போதைய டிராவிட் கிடையாது. சேவாக்கை தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து சென்றால், அங்கு வீசப்படும் பவுன்சர் பந்துகளால் அவரது தலை பதம்பார்க்கப்படும் என்றார்கள். ஆனால் சேவாக் அபாயகரமான வீரராக உருவானார். டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கையே மாற்றினார் சேவாக். எனவே வீரர்களை உருவாக்க வேண்டியது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் கடமை என கங்குலி தெரிவித்துள்ளார். 

சேவாக், தோனி போன்ற மிடில் ஆர்டர் வீரர்களை, டாப் ஆர்டரில் இறக்கிவிட்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவந்ததுடன், அதன்மூலம் அணியையும் வெற்றி பெற செய்தவர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.